Friday, August 3, 2018

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  தோன்றிய வரலாறு.-2

*🔴🔥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  தோன்றிய வரலாறு....*

*🔥1982 டிசம்பர் 6 லிருந்து 2.8.1984-TNPTF தோன்றும் வரை நடந்த நிகழ்வுகள்...*

*🔥நேற்றைய தொடர்ச்சி...*

*மாநில செயற்குழு*

1984 சூலை 27ல் மாநிலச் செற்குழு மதுரையில் கூடியது. மாநில அலுவலகக் கட்டட நிதி வசூலை மாவட்டங்கள் ஒப்படைத்தன. 5.2.84 மாநிலச் செயற்குழு தீர்மானங்களின் மீதான விவாதம் கடுமையாயிற்று. இத் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களுக்கு ஒப்புதலோ தகவலோ இல்லாமல் தன்னிச்சையாக மாநிலப் பொறுப்பாளர்கள் அந்த மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை ஈரோடு, கோவை, மாவட்டச் செயலாளர்கள் ஆதாரங்களுடன் தெரிவித்தனர். விவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.சந்தம் அதிகமானதால் வெளியே இருந்த இயக்க முன்னணியினர் திருப்பரங்குன்றம் கே.ஏ. தேவராஜன். மதுரை மேற்கு எல்.கோபாலகிருஷ்ணன் கம்பம்.வீ.பழனிச்சாமி, போடி எம்.பொன்னையா மற்றும் பலரும் அறைக்கதவை ஓங்கித் தட்டி திறக்கச் செய்தனர். செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம் நடத்துங்கள் தகராறுகள் வேண்டாம் என எச்சரித்து அறிவுரை கூறினர். செயற்குழு முடிக்கப்பட்டது. பொதுக் குழுவை சந்திப்போம் என்று கூறிக்கொண்டே கலைந்தனர்.

மாநிலத் தலைமையின் சுமுகமற்ற பிடிவாதத்தன்மையைக் கண்ட நீலகிரி மாவட்டக் கிளையும், கன்னியாகுமரி மாவட்டக் கிளையும் சனநாயக மற்ற இயக்க ஒற்றுமைக்கு எதிரான 5.2.84 தீர்மானங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என விரும்பின. அன்று இருந்த மொத்தம் 16 மாவட்டங் களில் வெளிநடப்புச் செய்த 7 மாவட்டக் கிளைகளுடன் இந்த இரண்டு மாவட்டக் கிளைகளும் இணைந்து 9 மாவட்டங்கள் 5.2.84 தீர்மானங்களுக்கு எதிராக இருந்தன. பெரும்பாலான வட்டார/நகரக் கிளைகளும் அமைப்பு விதித்திருந்தங்களுக்கு உடன்பாடின்மையைத் தெரிவித்த போதிலும் அவற்றைப் பொதுக்குழுவில் நிறைவேற்றிடவே தலைமை விரும்பியது.

*🔥பொதுக்குழு...*.

*🔥 5 2.84 செயற்குழு தீர்மானங்கள் மீது எதிர்ப்பு தெரிவித்ததற்காக மொத்தமுள்ள அப்போதைய 16 மாவட்டங்களைச்சேர்ந்த ஒன்பது மாவட்டச்செயலாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்து நீக்கமும்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமும்...*

2.8.84 ல் சென்னையில் கனவேல் திருமண மண்டபத்தில் மாநிலப் பொதுக்குழு கூடியது. 5.2.84 தீர்மானத்திற்கு உடன்பாடில்லாதவர்கள் ஒரு பகுதியாகவும் உடன்பட்டவர்கள் ஒரு பகுதியாகவும் அமர்ந்திருந்தனர். மாநிலத் தலைவரும், பொதுச் செயலாளரும் பேசினார்கள். செயற்குழு தீர்மானங்களைப் பொதுக்குழுவின் ஏற்புக்கு முன் வைத்தனர். மிகக் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

மண்டபத்திற்கு வெளியே வந்த பொதுச் செயலாளர் சு.ஈசுவரன் என்னிடம் "ஒற்றுமைக்கான வழி என்ன?" என்று வினவினார். "ஒரே வரி 5.2.84 செயற்குழு தீர்மானங்களை பொதுக்குழு ரத்து செய்கிறது, என்று ஒற்றை வரித் தீர்மானம் ஒற்றுமையைச் சிதைக்காது" என்ற ஆலோசனை ஏற்கப்படவில்லை.

காரசாரமான விவாதங்களுக்கிடையே நாடாளுமன்றம் போல் பொதுக்குழு உணவு இடைவேளை என ஒத்தி வைக்கப்பட்டது. பொதுக்குழு நடைபெற்ற இடத்திலேயே உணவுபரிமாறப்பட்டது. ஒரு பகுதியினர் உணவருந்தினர். மற்றொரு பகுதியினர் உணவருந்த உடன்படாமல் தாங்கள் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்  சாப்பிட மறுத்தவர்களின் மீது வீசிய எள்ளல் பேச்சுக்கள் சூடேற்றி விட்டன. இதனை ஆட்சேபித்து அவர்கள் எழுப்பிய முழக்கங்களால் வெளியில் திரண்டிருந்த ஆசிரியர்கள் மண்டபத்திற்குள் நுழைந்து விட்டனர். பதற்றம் நிலவியது.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் பொதுக்குழு கூடியதும் 5.2.84 தீர்மானங்கள் ஏற்கப்பட்டதாகவும் இதை எதிர்த்த 9 மாவட்டச்
செயலாளர்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் சு.ஈசுவரன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை ஆட்சேபித்த 9 மாவட்டச் செயலாளர்களும் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களும் அதே மண்டபத்தில் ஒரு பகுதியில் கூடி சுர்வாதிகாரத்தன்மை கொண்ட தலைவர் ஜே.எஸ்., இராசு, பொதுச் செயலாளர் .சு.ஈசுவரன், மாநிலப் பொருளாளர் து.இளங்கோ ஆகியோரைப் பொறுப்புக்களிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

மூத்த மாவட்டச் செயலாளர் நெல்லை மி.முத்தையா மாநிலத் தலைவர் பொறுப்பிற்கும், தஞ்சை மாவட்டச் செயலாளர் ந.வீரையன் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு
தென்னார்க்காடு மாவட்டச் செயலாளர் ச.அப்துல் மஜீத்  ஆகியோர் பெயர்களை முன்மொழிந்தனர்.

இந்த முன்மொழிவுகள் ஒரு மனதாக ஏற்பு செய்யப்பட்டனர்.கர ஒலியுடனும் இயக்க முழக்கங்களுடனும் மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராயப்பேட்டை மண்டபத்தில் பொதுக் குழுவை நடத்தினர்.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்திருந்த 3.8.1984 தொடக்கக் கல்வி இயக்ககம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் .4.8.1984 சென்னை ஆர்ப்பாட்ட ஊர்வலம் பேரணியையும் திட்டமிட்டபடி நடத்திட ஏற்பாடுகளைச் செய்தனர். இந்த இரண்டு போராட்டங்களும் வெற்றிகமாக நடந்தது.

*🔥"பிறக்கும்போதே போராட்டத்தில் குதித்த இயக்கம் - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ". என்ற முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.*

ஜே.எஸ் இராசு தலைமையிலான அணியும் இந்தப் போராட்டங்களை நடத்தியது.பேரணியில்  பங்கேற்க  தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்த இயக்க உறுப்பினர்கள் பொதுக்குழுவில் நிகழ்ந்தவற்றை அறிந்து பேரணியில் புதிய தலைமையை ஏற்று ந.வீரையன் தலைமையின் கீழ் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அணிவகுத்து புதிய தலைமையின் வலிமையை நிரூபித்தனர்.

*🔥ஊத்துக் குளியில் கூடிய மாநில செயற்குழு மாஸ்டரின் வழித்தோன்றல்கள் என்ற உரிமையை உள்வாங்கி அவரால் பயரிடப்பட்ட "சென்னை ராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் ". என்பதை "தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி " என்ற பெயரில் இயக்கப் பயணம் தொடர முடிவு செய்தது.*

இதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திலிருந்து பிரிந்து 6.5.1984ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாகியிருந்தது. "அ" வைத் தொடர்ந்து "ஆ" அமைந்ததால் "அரசு ஊழியர் சங்கமும் " _" ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் " இரட்டைக் குழல் துப்பாக்கிகளாயின.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்த பலரும் தன்னெழுச்சியாக வட்டார, மாவட்ட அமைப்புகளை ஏற்படுத்தினர்.கடந்த காலங்களில் சிறைச்  செம்மல்கள் எனப் பலரும் உற்சாகத்துடன் பொறுப்பாளர்களாயினர்.

*🔥"2.8.1984 லிருந்து இன்று வரை கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன் என்ற திசைவழியிலும் கூட்டுத் தலைமை என்ற தத்துவத்தின் வழியிலும் சுயநலம் சிறிதும் இன்றி ஆசிரியர் நலன்களுக்காக தொடர்ந்து சமரசமற்ற போராட்டங்களை  மேற் கொண்டு தொடர்ந்து 35 வது ஆண்டில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி  ஆசிரியர்' கூட்டணி தனது தனித்துவமான  போராட்டக்குணத்துடன் பயணிக்கிறது".*

_நன்றி.
தோழர். மா.ச.முனுசாமி எழுதிய ஆசிரியர் இயக்க வரலாற்றில் எனது நினைவலைகள்...

*_🅒тиρтfνιZнυdнυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment